சபை வரலாறு

பூநகரி என்பது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். பூநகரி பிரதேச செயலகப் பிரிவு வடக்கில் உப்புவாறு குளத்தாலும் கிழக்கில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுகளாலும் தெற்கில் மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேசத்தாலும் மேற்கு கடல் மார்க்கமாக எல்லையாக உள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் உள்ளது. இது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் கீழ் வருகிறது.

பூநகரி பிரிவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் முப்பத்தேழு (37மூ) சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கியதுடன் மொத்த பரப்பளவு 534.7 சதுர கிலோமீற்றர்களாகும். இந்தப் பகுதி 448.7 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், 85.69 சதுர கிலோமீட்டர் நீர் நிலத்தையும் கொண்டுள்ளது. இப்பிரிவில் மூன்று (03) உப அலுவலகங்கள் பத்தொன்பது (19) கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் தொண்ணூற்று நான்கு (94) கிராமங்களைக் கொண்டு ஒரு (01) பிரதேச சபையும் உள்ளது. இப்பிரிவு கிளிநொச்சியிலிருந்து இருபத்தி ஆறு (26) கி.மீ தொலைவிலும் கொழும்பிலிருந்து முந்நூற்று எண்பத்து நான்கு (384) கி.மீ தொலைவிலும் உள்ளது. இப்பிரிவின் பிரதான வீதிகள் பரந்தன்- பூநகரி மன்னார் -யாழ்ப்பாணம் இவ் வீதிகள் இலங்கையின் தெற்கில் உள்ள பகுதிகளையும் இணைக்கின்றன.

 

சபை தொடர்பான சுருக்க வரலாறு மற்றும் தற்போதைய நிலை

பூநகரி பிரதேச சபையானது 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டது.

பூநகரி பிரதேச சபையானது ஆரம்பத்தில் பூநகரி கிராம சபை என அமைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதேச சபைகள் ஆரம்பிக்கப்பட்ட போது மக்கள் தலைவர் தெரிவு செய்யப்படும் வரை விசேட ஆணையாளர் நியமிக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரதேச சபை இயங்கி வந்தது. அதன் பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக நிர்வாக பொறுப்பு முழுவதும் செயலாளரின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.

மேலும் இப் பிரதேச சபையானது தனது செயற்பாட்டினை இலகுபடுத்தும் நோக்கில் கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்களில் பின்வரும் உப அலுவலகங்களை நிறுவி தனது செயற்பாட்டினை மேற்கொள்கின்றது.

1.       இரணைதீவு உப அலுவலகம்

2.       பல்லவராயன்கட்டு உப அலுவலகம்

3.       பூநகரி உப அலுவலகம்

இச்சபைக்கான உறுப்பினர்களும் சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களுக்கு 20 உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.