
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தினம் தொடர்பிலும் அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பான முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், இன்று (03) முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப் பணம் கையேற்கும் நடவடிக்கைகள் இடம்பெறுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இக்காலகட்டத்தின் இடையிலே வரும் 2025 மார்ச் 13 ஆம் திகதி போயா தினம், 2025 மார்ச் 08, 09, 15, 16 ஆம் சனி, ஞாயிறு தினங்கள் தவிர்ந்த) தினங்களில் இந்நடவடிக்கைகள் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், தேர்தலுக்கான வேட்புமனு (பெயர் குறித்த நியமனங்களை) கையேற்கும் நடவடிக்கைகள் மார்ச் 17 – 19 ஆம் திகதி வரை மு.ப. 8.30 மணி தொடக்கம் பி.ப. 4.15 மணி வரையும் மற்றும் மார்ச் 20 நண்பகல் 12.00 மணி வரையும் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர், மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 272 பிரதேச சபைகள் ஆகிய 336 உள்ளூரதிகார சபைகளுக்கான தேர்தல்களே இவ்வாறு நடத்தப்படவுள்ளன.
ஆயினும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மற்றம் தெஹியத்தகண்டிய பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களே இவ்வாறு நடத்தப்படவுள்ளன.
மாநகர முதல்வர்கள், பிரதி மாநகர முதல்வர்கள், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களைத் கேர்ந்தெடுப்பதற்காக வேட்புமனு பத்திரங்கள் கையேற்பது பற்றிய அறிவித்தல் ஏற்கனவே குறித்த உள்ளூரதிகார சபைகளில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் 20ஆம் திகதி வேட்புமனு கையேற்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை முதல் வலைப்பாடு வரையான சுமார் 35 கிலோமீற்றர் நீளமாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ எனும் தொனிப்பொருளில் 23.02.2024 ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தினை பெரு வெற்றியடையச்செய்த பூநகரி பிரதேசசபை பணியாளர்களிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் திரு நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் யுத்த முடிவின் பின்னராக இப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தூய்மையாக்கல் பணியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தரம் பிரித்து எடுத்து செல்வதில் பூநகரி பிரதேச சபையின் வாகனங்களும் பணியாளர்களும் முழு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே பலரும் தமது பாராட்டுக்களை பணியாளர்களிற்கு தெரிவித்துள்ளனர்.
பூநகரி பிரதேசசபை தனது 2025ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை வரியிறுப்பாளர்களிடையே முன்வைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றது.

பூநகரி பிரதேச சபையின் பூநகரி பொது நூலகத்தினால் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 28.10.2024 அன்று பூநகரி பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது வாசிப்பு மாத விழிப்புணர்வு பேரணியுடன் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் எமது கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.ப.சத்தியராகவன் அவர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக பூநகரி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சி.ஆனந்தசிறி, யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு.செ.செரஞ்சன்,பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு.ச.லதீஸ்குமார்,பூநகரி நல்லூர் மகாவித்தியாலய அதிபர் திரு.இ.கலைச்செல்வன்,பூநகரி ஞானிமடம் அ.த.க.பாடசாலை அதிபர் திரு.செ.சிவசங்கர்,சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அ.சசிக்குமார். பூநகரி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.கா.நிருபா, திரு. பொன்.தில்லைநாதன் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர், திரு.கா.கார்த்திகேசு ஓய்வு நிலை உத்தியோகத்தர் கூட்டுறவு திணைக்களம் ஆகியோர் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,பூநகரி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
"இன்றைய உலகில் தகவல் சாதனங்களின் வருகை புத்தக வாசிப்பை பாதிக்கின்றது - பாதிக்கவில்லை" என்னும் தலைப்பில் பூநகரி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களால் பட்டிமன்றம் இடம்பெற்றது. அத்துடன் தேசிய வாசிப்பு மாத சிறப்பு மலர் பூங்கதிர் சஞ்சிகை இதழ் 10 சபையின் செயலாளர், பிரமத விருந்தினர், நூலகர் மற்றும் பொறுப்பதிகாரி தலைமையில் வெளியிடப்பட்டதுடன் ,தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் , பிரதேச சபையின் பதிவில் இயங்கிவருகின்ற சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியமும் வழங்கப்பட்டது.
